03 January 2016

சாத்தனூர் கல்மரம்

சாத்தனூர் கல்மரம்
சாத்தனூர் பகுதி முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திலுமாக ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. பூகோளரீதியில் சாத்தனூர் சிறப்பு பெற்றதாகும். ஒரு நீரோடையின் குறுக்கே 4 அடி சுற்றளவும் 12 மீட்டர் நீளமும் கொண்ட அதிசய கல்மரம் ஒன்று காணப்படுகிறது. இது சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரட்டேசியர் கால படிமமாகும். இந்த கல் மரத்தை 1860ஆம் ஆண்டு நில அளவை செய்ய வந்த ஆங்கிலேய நில அளவையரால் கண்டுபிடிக்கப்பட்டு அதன்பின் 1957ம் ஆண்டு டேராடூன் வன ஆராய்ச்சி கழக தலைவர் கிருஷ்ணசாமியால் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு தற்போது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அறிவிப்பு பலகை 
சாத்தனூர் கல்மரம்
திருவக்கரை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கல்மரம் 

சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பரப்பில் வளர்ந்த பூக்காத அரிய வகை தாவர இனத்தை சேர்ந்த மரமாக கருதப்படும். இந்த கல்மரம் அனைவராலும் வியக்கத் தக்க ஒன்றாகும். அக்காலத்தில் பூமியின் காலநிலை மாற்றம் காரணமாக எரிமலை குமுறி உலகின் பலபகுதிகள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டன. அந்த வகையில் அப்போது கடலால் சூழப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும் பகுதி இந்த எரிமலைக் குழம்பால் மூழ்குண்டு எண்ணற்ற உயிரினங்களும், தாவர உயிரினங்களும் இதில் புதையுண்டு பலகோடி ஆண்டுகள் சுண்ணாம்பு பாறைகளின் இடையில் மக்காமல் படிமமாக இருந்துள்ளது
இந்த அதிசய கல்மரத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல் நாட்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வந்து பார்த்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரம்பலூர், அரியலூர் உள்ளடக்கிய கடல் பகுதிகளை கல்விப் பயணமாக வந்து பார்வையிடாமல் அவர்கள் படிப்பு முழுமையடையாது என்றும் கூறுவதுண்டு.
இப்பகுதியை அடுத்த வரகூர், அணைப்பாடி, அழுந்தலைப்பூர், சாரதாமங்கலம் முதலான ஊர்களிலும் சில மீட்டர் நீளம் கொண்ட கல்மரங்கள் உள்ளன. கடல்-விலங்குகள், பாலூட்டிகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளும் இப்பகுதியில் கிடைத்துள்ளன.
இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக டைனோசர்களின முட்டைகளின் படிமங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூர் அருகே கள்ளக்குறிச்சி என்னுமிடத்தில்1992-ஆம் ஆண்டு 7 கிலோ எடையுள்ள 20 சென்டிமீட்டர் விட்டமுள்ள டைனோசர் முட்டை கல்லுருவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்த சுற்றுப்பகுதில் கிடைத்த அனைத்து தொல்லுயிர் எச்சங்களையும் பாதுகாக்கும் நோக்கில் தொல்லியல் பூங்கா அமைத்து தமிழக அரசு சுற்றுலாத் துறை சார்பில் சாலை, குடிநீர், மின் வசதி, ஓய்வறை மற்றும் பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தி அப்பகுதியை சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்தி வருகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூருக்கு அருகில் ஆலத்தூர் கேட் என்ற இடத்திலிருந்து 18 கி.மீ. கிழக்கு நோக்கி காரை கொளக்காநத்தம் வழியாக சாத்தனூர் சென்றடையலாம்.